Press Release

04/08/2010
கனேடிய தமிழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் அமைப்பின் அறிக்கை

குறிப்பிட்ட ஒரு இணைய செய்தித்தளம் எமது அமைப்பை ஒத்த பெயருடைய இன்னொரு அமைப்பிடமிருந்து ஒரு நடுநிலை அறிக்கையை பெற்று, ஏதோ அந்த அமைப்புத்தான் உண்மையான அமைப்பு போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கப் பார்கின்றது.

எமது அமைப்பின் செயற்பாடுகளிட்கும் அவ் அமைப்பின் செயற்பாடுகளிட்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அப்படி சம்பந்தம் இருப்பதாக நாம் எங்குமே கூறியதும் இல்லை. எமது அமைப்பு கனேடிய பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றவர்களை மட்டுமே அங்கத்தவர்களாக கொண்டது. எமது செயற்பாடுகள் பற்றி கனேடிய தமிழ் வானொலியில் தெளிவாக விளக்கியிருந்தோம்.

நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலை, கட்சி அரசியல் என்ற குறுகிய வட்டத்துக்குள் நோக்காமல், தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் உரிமைகளை வென்றெடுக்க கூடிய, அரசியல் நிற்பந்தங்களிட்கும் பிராந்திய வல்லாதிக்க அழுத்தங்களிட்கும் அடிபணியாத ஒரு திடமான தமிழ் தலைமைத்துவத்தை கட்டியெழுப்பக் கூடிய ஒரு வாய்ப்பாகவுமே எமது அமைப்பு நோக்குகின்றது.

வன்னி பெரு நிலப்பரப்பில் போரில் சிக்குண்டு சின்னாபின்னமாகிக் கிடக்கும் எமது உறவுகளிற்கு தேவையான பணிகளை செய்வது அவசர அவசியமானது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆயினும், நாம் இன்று துப்பரவு செய்யும் கிணறுகளில் நாளையும் தமிழ் மக்களே நீர் அள்ளிப் பருகவேண்டுமானால், உறுதியான ஒரு தலைமைத்துவம் தமிழ் மக்களிற்கு இருத்தல் அவசியம் என்பதாலேயே தேசியம் சார்ந்த சில அரசியல் நிலைப்பாடுகளை எமது அமைப்பு ஆதரிக்கின்றது.

குறிப்பிட்ட இணையத்தில் வெளியான மற்றைய அமைப்பின் அறிக்கையில் இருந்து, அவ் அமைப்பு அண்மைக் காலமாகவே தமது செயற்பாடுகள முன்னெடுப்பதை அறிய முடிகின்றது. அவ் அமைப்பின் எதிர்கால பணிகள் வெற்றிபெற வேண்டுமென வாழ்த்துகின்றோம். எமது அமைப்பானது தொண்ணூறுகளின் இறுதி பகுதியில் கனேடிய பல்கலைக் கழக மாணவர்களை ஒருங்கிணைக்கும் நோக்கோடு மாணவ அமைப்பாக உருவாக்கப்பட்டது .

பல்கலை கழக மாணவர்களை ஒருங்கிணைத்து பல போராட்டங்களையும் பரப்புரைகளையும் எமது அமைப்பு அக் காலகட்டங்களில் முன்னெடுத்திருந்தது . மறைந்த மாமனிதர் ரவிராஜ், சுவீடன் பேராசிரியர் பீட்டர் சாக் போன்றவர்களை வரவழைத்து, கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் வெளிவிவகார அதிகாரிகளையும் சந்திப்பதற்கு ஏற்பாடுகளை செய்திருந்தோம்.

பல்கலைக் கழக மட்டங்களில் நாம் நடாத்திய கருத்தரங்குகள் பற்றிய கட்டுரைகள் அவ்வவ் பல்கலைக் கழக ஆங்கில பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன. இக்காலப் பகுதிகளில் பல்கலைக் கழக மாணவர்களின் கலைத் திறனை வெளிக்காட்கும் கலை நிகழ்ச்சிகளையும், விளையாட்டுப் போட்டிகளையும், நூல் வெளியீடுகளையும் திறம்பட நடாத்தியிருந்தோம். இவற்றுள், இரண்டாயிரத்தின் முற்பகுதியில் எமது அமைப்பு நடாத்திய “வீரம்” எனும் கலைவிழாவும், “கல்லறைப் பூக்கள்” என்ற நூல் வெளியீடும் குறிப்பிடத்தக்கவை.

இரண்டாயிரத்தின் நடுப்பகுதியில் தொடர்ந்து மூன்று வருடங்களாக இலாப நோக்கற்ற கல்விச் சேவைகளை டொரோண்டோ பெருநகரப் பகுதியில் வழங்கியிருந்தோம். எமது அமைப்பின் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட கணணி நிறுவனங்கள் தற்போதும் சிறப்பான தனியார் நிறுவனங்களாக இயங்கிக் கொண்டிருப்பது எமக்குப் பெருமையான விடயம்.

சமாதான காலத்தில், யாழ் பல்கலைக் கழகத்திலும் வன்னியிலும் கணனிக் கருத்தரங்குகளை எமது அமைப்பு நடாத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்க விடயமாகும். “ஸ்ரீ லங்கா புறக்கணிப்பு” போராட்டாத்திலும் “ஜி. எஸ். பி.” வரிச்சலுகை எதிர்ப்பு போராட்டத்திலும் எமது அமைப்பு கணனி வழியாகவும் நேரடியாகவும் பரப்புரைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றது.

எமது அமைப்பு ஆரம்பத்தில் பல்கலைக் கழக மாணவ அமைப்பாகவும், பின்னர் பட்டதாரிகள் அமைப்பாகவும் இயங்கி வருகிறது. எதிர்காலத்தில் இளம் தொழில்சார் வல்லுனர்களையும் உள்வாங்கி வடஅமெரிக்க அளவில் விரிவுபடுத்துவதே எமது திட்டமாகும். தெளிவு கருதி எமது அமைப்பின் கடந்தகால செயற்பாடுகள் சிலவற்றை பட்டியலிட்டாலும், எதிர்காலம் நோக்கிய தமிழ் மக்களின் பயணத்தில் எமது அமைப்பு காத்திரமான பங்கு வகிக்க வேண்டும் என்பதே எமது அங்கத்தவர்களின் பெருவிருப்பாகும்.

தாயகத்தையும் தமிழர் தேசியத்தையும் நேசிக்கும் தமிழ் பட்டதாரி உறவுகளை எம்மோடு இணையும்படி அன்போடு வேண்டி நிற்கின்றோம்